3102. | முழவினில், வீணையில், முரல் நல் யாழினில், தழுவிய குழலினில், சங்கில், தாரையில், எழு குரல் இன்றியே, என்றும் இல்லது ஓர் அழு குரல் பிறந்தது, அவ் இலங்கைக்கு அன்றுஅரோ. |
அவ் இலங்கைக்கு - அந்த இலங்கை மாநகருக்குத் (தீ நிமித்தமாக) ; முழவினில் வீணையில் - மத்தளம், வீணைகளிலிருந்து; முரல் நல் யாழினில் - இசைக்கும் இனிய யாழிலிருந்து; தழுவிய குழலினில் - தன் வசமாக்கும் புல்லாங்குழலிலிருந்து; சங்கில் தாரையில் - சங்கு, எக்காளம் ஆகியவற்றிலிருந்து; எழு குரல் இன்றியே - எப்போதும் எழுகிற மங்கல ஒலி வாராது; என்றும் இல்லது ஓர் அழு குரல் - இதுவரை கேட்காத அழுகை ஓசையானது; அன்று பிறந்தது - அப்பொழுது தோன்றி ஒலித்தது; அரோ - அசை. இன்னிசை முழங்கிய நகரில் அமங்கல அழுகை ஒலி கேட்கலாயிற்று. தீ நிமித்தம் கூறியவாறு. 36 |