3103.கள்ளுடை வள்ளமும்,
     களித்த தும்பியும்,
உள்ளமும், ஒரு வழிக்
     கிடக்க ஓடினார்;-
வெள்ளமும் நாண் உற
     விரிந்த கண்ணினார்-
தள்ளுறும் மருங்கினர், தழீஇக்
     கொண்டு ஏகினார்.

     வெள்ளமும் நாண்உற - பெருங்கடலும் தோற்றுப்போகும் படி;
விரிந்த கண்ணினார் - விரிந்த கண்களையுடைய அரக்க மகளிர்;
கள்ளுடை வள்ளமும் - (தாம் அருந்தும்) மதுக் கிண்ணங்களும்; களித்த
தும்பியும் -
மதுவை மொய்த்து ஆரவாரிக்கும் வண்டுகளும்; உள்ளமும் -
மதுவில் ஈடுபட்ட மனமும் (ஆகியவற்றை); ஒருவழிக் கிடக்க - ஒரு
புறத்திலே விட்டு விட்டு; ஓடினார் - ஓடிச் சென்றார்; தள்ளுறும்
மருங்கினர் -
துவண்ட இடையினை உடையராய்; தழீஇக் கொண்டு
ஏகினார் -
(ஒருவரை யொருவர்) தழுவிக் கொண்டு செல்லலாயினர்.

     இனி, சூர்ப்பணகை நிலை கண்டு கண்ணீர் வெள்ளம் பொழிந்த
கண்களோடு, மது முதலியவற்றை ஒதுக்கிவிட்டு, அவளைத் தழுவிச்
சென்றனர் எனவும் கூறுவர்.                                     37