3105.பொன்-தலை மரகதப்
     பூகம் நேர்வு உறச்
சுற்றிய மணிவடம்
     தூங்கும் ஊசலின்
முற்றிய ஆடலில்
     முனிவுற்று ஏங்கினார்,
சிற்றிடை அலமரத்
     தெருவு சேர்கின்றார்.

     (மற்றும் சில மகளிர்); பொன்தலை மரகதப் பூகம் - பொன்னாய்ப்
பழுத்த காய்கள் குலுங்கும் பச்சை நிறக் கமுக மரங்களின்; நேர்வுறச்
சுற்றிய -
(கழுத்து) நோகும்படியாகக் கட்டப்பட்டுள்ள; மணிவடம் தூங்கும்
ஊசலின் -
மணிகள் பதித்த கயிற்றில் தொங்கும் ஊஞ்சலில் அமர்ந்து;
முற்றிய ஆடலில் முனிவுற்று - முனைப்பாக ஆடிக் கொண்டிருந்த
ஆடலை (சூர்ப்பணகையைக் கண்டதால்) வெறுத்து; ஏங்கினார் - துயரம்
கொண்ட நிலையில்; சிற்றிடை அலமர - மெல்லிடை நோகும் படி; தெருவு
சேர்கின்றார் -
தெருக்களில் சென்று கூடினர்.

     ஊஞ்சல் அமைக்கப்பட்டுள்ள அழகும், அதற்கு மாறான சோகமும்
முரணுற அமைந்துள்ளன. 'பூகம் நோவுற' என்னும் கூற்று மரங்களுக்கும்
உயிருண்டு என்ற சிந்தனையைப் புலப்படுத்திற்று.                    39