கலிவிருத்தம் (வேறு) 3107. | 'நெய்ந் நிலைய வேல் அரசன், நேருநரை இல்லான், இந் நிலை உணர்ந்த பொழுது, எந் நிலையம்?' என்னா, மைந் நிலை நெடுங் கண் மழை வான் நிலையது ஆக, பொய்ந்நிலை மருங்கினர் புலம்பினர், புரண்டார். |
நெய்ந்நிலைய வேல் அரசன் - நெய் பூசி அழகு செய்யப் பெற்ற வேலேந்திய அரசனும்; நேருநரை இல்லான் - தனக்கு எதிராக நிற்பார் எவரும் இல்லாதவனும் (ஆகிய இராவணன்); இந்நிலை உணர்ந்த பொழுது- (சூர்ப்பணகைக்கு உற்ற) இக் கொடிய நிலையினை அறியுங்கால்; எந்நிலையம் என்னா - எத்தகைய மனநிலை கொள்ள நேருமோ என்று; மைந்நிலை நெடுங்கண் - மை நிலைபெற்ற தம் பெரிய கண்களில்; மழை வான் நிலையது ஆக - பொழியும் கண்ணீர் மேகம் சொரியும் மழையை நிகர்த்ததாக; பொய்ந் நிலை மருங்கினர் - பொய்யோ என்னும் இடை படைத்த பெண்கள்; புலம்பினர், புரண்டார் - அழுது கீழே விழுந்து புரண்டனர். இடையின் மென்மையை உயர்வு நவிற்சியாகப் பொய்யான இடை என்று மொழிந்தார். (3606 வரையிலும் உள்ளது போலவே 3107 முதல் 3128 முடியுமளவு உள்ளனவும் கலிவிருத்தங்களே எனினும் சீரின் அசைகள் வேறு அமைப்புடையன). 41 |