3108. மனந்தலை வரும் கனவின்
     இன் சுவை மறந்தார்;
கனம் தலை வரும் குழல்
     சரிந்து, கலை சோர,
நனந் தலைய கொங்கைகள்
     ததும்பிட, நடந்தார்;-
அனந்தர் இள மங்கையர்-
     அழுங்கி அயர்கின்றார்.

    அனந்தர் இள மங்கையர் - துயில் கொண்டிருந்த இளம் பெண்கள்
சிலர்; மனம் தலை வரும் கனவின் இன்சுவை மறந்தார் -
(சூர்ப்பணகையின் அழுகை கேட்டு) மனத்தின் இடத்தே உண்டான
கனவினால் விளையும் இனிய இன்பத்தையும் மறந்து போனவர்களாய்; கனம்
தலை வரும் குழல் சரிந்து -
முகிலென அமைந்த கூந்தல்
சரிந்தவர்களாய்; கலை சோர - ஆடை கலைந்தவர்களாய்; நனந் தலைய
கொங்கைகள் ததும்பிட -
விரிந்தமைந்த மார்பகங்கள் அசைய; நடந்தார்
-
நடக்கலாயினர்; அழுங்கி அயர்கின்றார் - வருத்தம் ஓங்க
மயங்கலாயினர்.

     மனந்தலை - மனத்தலை என்பதன் மெலித்தல் விகாரம். கனம் மேகம்
என்னும் பொருளினது.                                         42