3109.'அங்கையின் அரன் கயிலை
     கொண்ட திறல் ஐயன்
தங்கை நிலை இங்கு இதுகொல்?'
     என்று, தளர்கின்றார்;
கொங்கை இணை செங் கையின்
     மலைந்து,-குலை கோதை
மங்கையர்கள்-நங்கை அடி
     வந்து விழுகின்றார்.

    'அங்கையின் அரன்கயிலை கொண்ட - தன் (இருபது) கரங்களால்
சிவபிரான் கயிலை மலையை எடுத்த; திறல் ஐயன் - ஆற்றல் மிக்க நம்
தலைவன் (இராவணனுடைய) ; தங்கை நிலை - தங்கையாகிய
சூர்ப்பணகையின் கதியே; இங்கு இது கொல் - இப்போது
இவ்வாறாயிற்றோ?; என்று - என எண்ணி; குலை கோதை மங்கையர்கள்-
அவிழ்ந்து சிதறிய கூந்தலை உடைய அரக்க மகளிர் சிலர்; தளர்கின்றார்-
வருத்தம் கொண்டவர்களாய்; கொங்கை இணை செங்கையின் மலைந்து-
இரு மார்பகங்களையும் தமது சிவந்த கரங்களால் அடித்துக் கொண்டு;
நங்கை அடி - சூர்ப்பணகை காலடியில்; வந்து விழுகின்றார் - வந்து
வீழ்கின்றவர்களாயினர்.

     இராவணன் ஆற்றலை நினைந்து, அவன் தங்கைக்கும் இந்நிலையோ
என்று கவலை கொண்டனர்.                                     43