3110. | 'இலங்கையில் விலங்கும் இவை எய்தல் இல, என்றும், வலங் கையில் இலங்கும் அயில் மன்னன் உளன் என்னா; நலம் கையில் அகன்றதுகொல், நம்மின்?' என, நைந்தார்; கலங்கல் இல் கருங் கண் இணை வாரி கலுழ்கின்றார். |
வலம் - வெற்றி மிக்கதாய்; கையில் இலங்கும் - கரத்திலே விளங்கும்; அயில் மன்னன் - வேற்படை ஏந்திய அரசனாகிய (இராவணன்); உளன் என்னா - (ஆட்சித் தலைவனாய்) உள்ளான் என்பதால்; இலங்கையில் - இலங்கை மாநகரில்; என்றும் விலங்கும் இவை எய்தல் இல - எக்காலத்தும் மிருகங்களும் இத்தகைய கொடுமையை அடைந்ததில்லை; நம்மின் நலம் - நம்முடைய சிறப்புக்கள்; கையில் அகன்றது கொல் - நம் கைவிட்டு நீங்கிப் போயிற்றோ?; என - என்று எண்ணி; நைந்தார் - வருந்தியவர்களாய்; கலங்கல் இல் - இதுவரை கலங்கியறியாத; கருங்கண் இணை - கரிய இரு கண்களிலும்; வாரி கலுழ்கின்றார் - வெள்ளம் பெருக நின்றார்கள். விலங்குகளும் துன்பம் அறியாத நாடாக இராவணன் ஆட்சியில் இலங்கை விளங்கியமை புலப்படுத்தப்படுகிறது மயன் மகளை மணம் செய்த காலத்து இராவணனுக்கு மிக்க சிறப்புடைய வேல் மயனால் வழங்கப் பெற்றது என்பது வரலாறு.44 |