இராவணன் அடிகளில் சூர்ப்பணகை விழுதல் 3111. | என்று, இனைய வன் துயர் இலங்கைநகர் எய்த, நின்றவர் இருந்தவரொடு ஓடு நெறி தேட, குன்றின் அடி வந்து படி கொண்டல் என, மன்னன் பொன் திணி கருங் கழல் விழுந்தனள், புரண்டாள். |
என்று இனைய வன் துயர் - இவ்வாறான பெருந்துயரத்தை; இலங்கை நகர் எய்த - இலங்கை நகர மக்கள் எய்தவும்; நின்றவர் இருந்தவரொடு ஓடு நெறி தேட - அமர்ந்திருந்தவரும், நின்றிருந்தவரும் ஓடுதற்கு வழி பார்க்கவும்; குன்றின் அடி வந்துபடி கொண்டல் என - மலையடிவாரம் நாடிச் சேர்ந்த மேகத்திரளைப் போல; (சூர்ப்பணகை) ; மன்னன் பொன் திணி கருங்கழல் - அரசன் இராவணனுடைய பொன்னாலாகிய வீரக்கழல் அணிந்த கரிய பாதங்களில்; விழுந்தனள் புரண்டாள் - வந்து வீழ்ந்து உருண்டாள். இராவணன் சீற்றம் கொள்ளும் போது தாங்க ஒண்ணாதென ஓடக் கருதினர் மக்கள். உவமையணி. இராவணன் - குன்று; சூர்ப்பணகை - கருமேகம். கருங் கழல் - பாதத்துக்கு அன்மொழித்தொகை.45 |