3112. மூடினது இருட் படலம்
     மூஉலகும் முற்ற;
சேடனும் வெருக்கொடு சிரத்
     தொகை நெளித்தான்;
ஆடின குலக் கிரி;
     அருக்கனும் அயிர்த்தான்;
ஓடின திசைக் கரிகள்;
     உம்பரும் ஒளித்தார்.

    மூஉலகும் முற்ற - மூன்று உலகங்கள் முழுவதிலும்; இருட் படலம்
மூடினது -
இருள் செறிந்து கவிந்தது; சேடனும் - பூமி தாங்கும் ஆதி
சேடனும்; வெருக்கொடு - அச்சம் கொண்டு; சிரத்தொகை நெளித்தான் -
தன் ஆயிரம் தலைகளையும் ஒடுக்கினான்; குலக்கிரி ஆடின - மலைத்
தொகுதிகள் இடம் பெயர்ந்தன; அருக்கனும் அயிர்த்தான் - சூரியனும்
தனக்கு ஏதேனும் கேடு வருமோ என ஐயப்பட்டான்; திசைக்கரிகள் ஓடின-
திக்கு யானைகள் அஞ்சி ஓடின; உம்பரும் ஒளித்தார் - தேவர்களும்
வெருண்டு ஓடி ஒளிந்தனர்.

     இராவணன் சினக் கோலம் கருதித் திங்களும், விண்மீன்களும்,
அக்கினியும் மறைய இருள் சூழ்ந்ததாகவும், அவன் எழுந்த அதிர்ச்சியில்
ஆதிசேடன் நெளிந்ததாகவும், காலை மிதித்தூன்ற மலைகள்
நடுங்கியதாகவும், அவன் கோபம் எழ சூரியன், திக்கு யானைகள்,
தேவர்கள் திகைத்து ஒளிந்ததாகவும் கற்பனை செய்தார்.

     குலக்கிரிகள் - கயிலை, இமயம், மந்தரம், விந்தியம், நிடதம்,
ஏமகூடம், நீலம், கந்தமாதனம் என்பன. சேஷன் - அனைத்தும் அழிகிற
ஊழியிலும் தான் அழியாது மீதியாய் நிற்பவன்.                      46