3113. | விரிந்த வலயங்கள் மிடை தோள் படர, மீதிட்டு எரிந்த நயனங்கள் எயிறின் புறம் இமைப்ப, நெரிந்த புருவங்கள் நெடு நெற்றியினை முற்ற, திரிந்த புவனங்கள்; வினை, தேவரும், அயர்த்தார். |
விரிந்த வலயங்கள் - ஒளி விரிந்த வாகு வளைகள்; மிடை தோள் படர - பொருந்திய தோள்கள் பொங்கி எழவும்; நயனங்கள் - கண்கள்; மீதிட்டு எரிந்த - நெருப்புக் கிளர்ந்து எரியவும்; எயிறின் புறம் இமைப்ப - பற்கள் வெளித் தோன்றி ஒளிவீசவும்; நெரிந்த புருவங்கள் - வளைந்துயரும் புருவங்கள்; நெடு நெற்றியினை முற்ற - விரிந்த நெற்றியின் மீதேறிச் சேரவும்; (அக்கோபக் காட்சி் கண்டு); புவனங்கள் திரிந்த - உலகங்கள் நிலைகுலைந்தோடின; தேவரும் - தேவர்களும்; வினை அயர்த்தார் - செய்தற்குரிய கடமைகளை மறந்தனர். பொங்கியெழும் தோளும், நெருப்புமிழ் கண்களும், புறத்திடும் பற்களும், உயரும் புருவமும் சின அறிகுறிகள். 'நயனங்கள் எரிந்த' என்ற தொடரில் 'எரிந்த என்ற பலவின் பால் வினைமுற்றை (முற்றெச்சம்) என எச்சமாக்கிப் பொருள் கொள்ளப்பட்டது.47 |