3114. | தென் திசை நமன்தனொடு தேவர் குலம் எல்லாம், இன்று, இறுதி வந்தது நமக்கு' என, இருந்தார்; நின்று உயிர் நடுங்கி, உடல் விம்மி, நிலை நில்லார், ஒன்றும் உரையாடல் இலர், உம்பரினொடு இம்பர். |
தென் திசை நமன் தனொடு - தெற்குத் திசையினனாகிய எமனுடன்; 'தேவர் குலம் எல்லாம் - அனைத்துத் தேவர்களும்'; 'நமக்கு இன்று இறுதி வந்தது' - 'நம் எல்லாருக்கும் இன்றோடு முடிவு காலம் வந்துவிட்டது'; என இருந்தார் - என்று கருதினர்; உம்பரினொடு இம்பர் - வானுலகரும் மண்ணுலகரும்; நின்று உயிர் நடுங்கி - அஞ்சி நின்று உயிரும் பதைக்க; உடல் விம்மி - உடல் பெருமூச்செறிந்து; நிலை நில்லார் - ஒரு நிலையில் நிற்க முடியாதவர்களாய்; ஒன்றும் உரையாடல் இலர் - ஏதும் பேசலாற்றாது மௌனம் பூண்டனர். 48 |