'இப்படிச் செய்தவர் யார்' என இராவணன் கேட்டல் 3115. | மடித்த பில வாய்கள்தொறும், வந்து புகை முந்த, துடித்த தொடர் மீசைகள் சுறுக்கொள உயிர்ப்ப, கடித்த கதிர் வாள் எயிறு மின் கஞல, மேகத்து இடித்த உரும் ஒத்து உரறி, 'யாவர் செயல்?' என்றான். |
மடித்த - சினத்தால் உதடு அதுக்கிய; பில வாய்கள் தொறும் - மலைக் குகை போன்ற பத்து வாய்களிலும்; வந்து புகை முந்த - சினத் தீயின் புகை பொங்கி வர; துடித்த தொடர் மீசைகள் - கோபத்தால் துடிதுடிக்கும் அடர்ந்த மீசைகள்; சுறுக்கொள உயிர்ப்ப - பொசுங்கி நாறும்படி பெருமூச்சு வெளிப்பட; கடித்த கதிர் வாள் எயிறு - இறுக மென்ற, ஒளி வீசும் கூரிய பற்கள்; மின் கஞல - மின்னல் போல் பிரகாசிக்க; மேகத்து இடித்த உரும் ஒத்த உரறி - முகில்களில் ஓசை செய்து எழும் இடி முழக்கம் போல் பேரொலி செய்து; 'யாவர் செயல்' என்றான் - 'இது யாருடைய செயல்' என்று வினவினான். தங்கை நிலைகண்ட இராவணன் கொண்ட சினமும் கேட்ட வினாவும் இப்பாடலில் அமைந்துள்ளன. 49 |