3116. | 'கானிடை அடைந்து புவி காவல் புரிகின்றார்; மீனுடை நெடுங் கொடியினோன் அனையர்; மேல் கீழ் ஊனுடை உடம்பு உடைமையோர் உவமை இல்லா மானிடர்; தடிந்தனர்கள் வாள் உருவி' என்றாள். |
கானிடை அடைந்து - (நான் இருந்த) கானகத்திற்கு வந்து; புவி காவல் புரிகின்றார் - இந்தப் பூமியைப் பாதுகாக்கும் பணியினை மேற் கொண்டிருக்கின்றனர்; மீனுடை நெடுங் கொடியினோன் அனையர் - மகர மீன் கொடியை உடைய மன்மதனுக்கு நிகரானவர்கள்; மேல் கீழ் - விண்ணிலும் மண்ணிலும்; ஊனுடை உடம்பு உடைமையோர் - தசையாலாகிய உடம்பு படைத்தோர் எவரும்; உவமை இல்லா மானிடர் - தமக்கு உவமையாகக் கூற முடியாத (அழகும் வீரமும் உடைய) மானிடர் இருவர்; வாள் உருவித் தடிந்தனர்கள் - வாளை உருவி இவ்வாறு அரிந்தனர்; என்றாள் - என்று (சூர்ப்பணகை) கூறினாள். தனக்குத் தீமை செய்தவர்களின் அழகையும் காம மிகுதியால் பாராட்டி உரைத்தாள். புவி காவல் புரிகின்றார் என்றது அரசகுமாரர்கள் என்ற குறிப்பை உணர்த்த எனலாம். அனுபவிக்கும் அவலத்திடையிலும் முறையிட்டுப் பழி தூண்டும் செயலிடையிலும் இராமலக்குவரின் மேனி அழகை மறக்க முடியவில்லை. 50 |