இராவணன் மீண்டும் சூர்ப்பணகையை வினவல் 3117. | 'செய்தனர்கள் மானிடர்' என, திசை அனைத்தும் எய்த, நகை வந்தது; எரி சிந்தின, கண் எல்லாம்; 'நொய்து அவர் வலித் தொழில்; நுவன்ற மொழி ஒன்றோ? பொய் தவிர்; பயத்தை ஒழி; புக்க புகல்' என்றான். |
(சூர்ப்பணகை) ; 'மானிடர் செய்தனர்கள்' என - மனிதர்கள் இவ்வாறு செய்தார்கள் என்று கூறவும்; திசை அனைத்தும் எய்த நகை வந்தது - (இராவணனுக்குத்) திசைகளெல்லாம் எதிரொலிக்கும்படி நகைப்புப் பிறந்தது; கண் எல்லாம் எரி சிந்தின - கண்களில் நெருப்புப் பொறி பறந்தது; 'அவர் வலித் தொழில் - அம் மனிதர்களின் துணிச்சலான செயல்; நொய்து - அற்பமானது; நுவன்ற மொழி ஒன்றோ - நீ கூறிய செய்தி உண்மையானது தானே? ; பொய்தவிர் - பொய்யை விட்டுச் சொல்; பயத்தை ஒழி - அச்சத்தை ஒழிவாயாக; புக்க புகல் - நடந்தவற்றை மெய்யாகச் சொல்'; என்றான் - என்று மொழிந்தான். மனிதர் செயலெனின் உண்மையாய் இருக்க முடியாதே என்று கருதி இவ்வாறு கேட்டான். புக்க - புகுந்தவை நிகழ்ந்தவை; பலவின்பாற் பெயர். 51 |