சூர்ப்பணகையின் விடை

3116.'மன்மதனை ஒப்பர், மணி
     மேனி; வட மேருத்
தன் எழில் அழிப்பர், திரள்
     தோளின் வலிதன்னால்;
என், அதனை இப்பொழுது
     இசைப்பது? உலகு ஏழின்
நல் மதம் அழிப்பர், ஓர்
     இமைப்பின், நனி, வில்லால்.

    மணி மேனி - (அம்மானிடர்) மணி போல் ஒளி வீசும் மேனியழகால்;
மன்மதனை ஒப்பர் - காமனை ஒத்திருப்பார்கள்; திரள் தோளின் வலி
தன்னால் -
திரண்ட தோள்களின் வலிமையைக் கணக்கிட்டால்; வடமேருத்
தன் எழில் அழிப்பர் -
வடக்கில் உள்ள மேரு மலையின் அழகையும்
தோல்வியுறச் செய்வர்; என் அதனை இப்பொழுது இசைப்பது? -
அவ்வாற்றல்களை இங்கே இப்போது விரித்துப் பேசி என்ன பயன்;
வில்லால் - (தம்) வில்லாற்றலால்; ஓர் இமைப்பின் - கண்ணிமைப்
பொழுதில்; உலகு ஏழின் நல்மதம் நனி அழிப்பர் - ஏழு உலகங்களின்
வலிமை மிக்காரை யெல்லாம் மிக ஆற்றலோடு அழிக்க வல்லவர் ஆவர்.

     இராம இலக்குவரின் அழகு, வலிமை இரண்டினையும் இப்பாடலில்
கூறினாள்.                                                   52