3119. | 'வந்தனை முனித்தலைவர்பால் உடையர்; வானத்து இந்துவின் முகத்தர்; எறி நீரில் எழு நாளக் கந்த மலரைப் பொருவு கண்ணர்; கழல், கையர்; அந்தம் இல் தவத் தொழிலர்; ஆர் அவரை ஒப்பார்? |
(மேலும் அவர்கள்); முனித்தலைவர் பால் வந்தனை உடையர் - தவ நலம் சான்ற பெரியோரிடம் வணக்கம் செய்யும் இயல்பினர்; வானத்து இந்துவின் முகத்தர் - விண்ணில் விளங்கும் மதியம் போல் முகம் உடையவர்; எறி நீரில் - அலை வீசும் நீர் நிலையில்; எழு நாளக் கந்த மலரை - வளரும் தண்டோடு கூடிய மண மிகு தாமரைப் பூவை; பொருவு கண்ணர் - ஒத்த கண்களை உடையவர்; கழல் கையர் - அம்மலர் போன்றே அமைந்த காலும் கரமும் உடையவர்; அந்தம் இல்தவத் தொழிலர் - எல்லையற்ற தவமே கடமையாகக் கொண்டவர்; ஆர் அவரை ஒப்பார்? - அவர்களுக்கு நிகராக யாரைக் கூற முடியும்? (எவரையும் கூற முடியாது). முனிவரை வணங்குவரென்றமையின் பிறர் யாரையும் வணங்க மாட்டார் என உணர்த்தினாள். இப்பாடலிலும் அவர்கள் அழகும் பண்பும் உரைக்கப்பட்டன. 53 |