3120.'வற்கலையர்; வார் கழலர்;
     மார்பின்அணி நூலர்;
விற் கலையர்; வேதம் உறை
     நாவர்; தனி மெய்யர்;
உற்கு அலையர்; உன்னை ஓர்
     துகள்-துணையும் உன்னார்;
சொற் கலை எனத் தொலைவு
     இல் தூணிகள் சுமந்தார்.

    (இன்னும் அவர்கள்) வற்கலையர் - மரவுரி தரித்திருப்பர்; வார்
கழலர் -
நெடிய வீரக்கழல் அணிந்திருப்பர்; மார்பின் அணி நூலர் -
மார்பில் முப்புரி நூல் அணிந்திருப்பர்; விற்கலையர் - வில்லின்
கலையெல்லாம் அறிந்திருப்பர்; வேதம் உறை நாவர் - மறை பயின்ற
நாவை உடையவர்; தனி மெய்யர் - தனிச் சிறப்பு மிக்க மேனி
அழகுடையவர்; உற்கு அலையர் - உனக்கு அஞ்சாதவர்கள்; உன்னை
ஓர் துகள் துணையும் உன்னார் -
ஒரு சிறு தூசியளவு கூட உன்னை
மதியாதவர்; சொற் கலை என - சொல்லால் அமைந்த கலைப் படைப்புப்
போல; தொலைவு இல் தூணிகள் சுமந்தார் - அழிவில்லாத அம்புகளைக்
கொண்ட அம்பறாத் தூணிகள் தாங்கினவர்கள்.

     மரவுரியும் அவர்க்கு அழகானமையின் வற்கலையர் என்றாள். கரன்
முதலியோரை அழித்த அருமை விளங்க விற்கலையர் என்றாள். உன்னை
அவர்கள் மதிக்கவில்லை என்பதை எனக்கு நேர்ந்தவையே காட்டும் என்று
குறிப்பால் காட்டினாள். இதனால் இராவணனின் சினத்தையும் தூண்டினாள்.
சொல்லும் அம்பும் இணையானவை 'சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசுரம்'
எனத் (388) தாடகை வதைப் படலத்தும் கூறினார்.54