3121.'மாரர் உளரே இருவர், ஓர்
     உலகில் வாழ்வார்?
வீரர் உளரே, அவரின் வில்
     அதனின் வல்லார்?
ஆர் ஒருவர் அன்னவரை
     ஒப்பவர்கள், ஐயா?
ஓர் ஒருவரே இறைவர்
     மூவரையும் ஒப்பார்.

     ஐயா - ஐயனே; ஓர் உலகில் வாழ்வார் - ஒரே உலகின்கண்
வாழ்கின்றவர்களாய்; இருவர் மாரர் உளரே? - இரண்டு மன்மதர்கள்
இருக்கின்றார்களா?; அவரின் வில்லதனில் வல்லார் - அவர்களைக்
காட்டிலும் வில் வலிமையில் வல்லவர்; வீரர் உளரே - (வேறு) வீரர்களும்
இருக்கின்றார்களா?; ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள் ஆர் -
அவர்களுக்குச் சமானமாக உள்ளவர் எவரேனும் உண்டா?; ஓர் ஒருவரே
இறைவர் மூவரையும் ஒப்பார் -
அவர்களில் ஒவ்வொருவருமே
மும்மூர்த்திகளுக்கு நிகரானவர்களாய் இருப்பார்கள்.

     மும்மூர்த்திகளும் சேர்ந்தால் இவர்களில் ஒருவருக்குச் சமமாவர் என
இவர்களை உயர்த்திக் கூறினாள்.55