3122. | "ஆறு மனம் அஞ்சினம், அரக்கரை" எனச் சென்று ஏறு நெறி அந்தணர் இயம்ப, "உலகு எல்லாம் வேறும்" எனும் நுங்கள் குலம், "வேரொடும் அடங்கக் கோறும்" என, முந்தை ஒரு சூளுறவு கொண்டார். |
ஏறு நெறி அந்தணர் - மேலான நெறியில் வாழும் முனிவர்கள்; ஆறுமனம் அஞ்சினம் அரக்கரை - அடக்கம் மிக்க எங்கள் மனம் அரக்கர்களைக் கண்டு அஞ்சுகிறது; எனச் சென்று இயம்ப - என்று (அம்மானிடரிடம்) சென்று சொல்லவும் (அம்மனிதர்கள்); உலகு எல்லாம் வேறும் எனும் - அனைத்து உலகங்களையும் நாங்கள் வெல்வோம் என்று கூறும்; நுங்கள் குலம் - அரக்கர்களாகிய உங்கள் வமிசத்தை; வேரொடும் அடங்கக் கோறும் என - வேரோடு அழித்து முடிப்போம் என்று; முந்தை ஒரு சூளுறவு கொண்டார் - முன்பு ஒரு சபதம் செய்துள்ளனர். அகத்தியப் படலத்தில் முனிவர்க்கு அபயம் தந்த செயல் கூறப்பட்டுள்ளது. ஆறு மனம் - வினைத் தொகை. 56 |