3123.'தராவலய நேமி உழவன்,
     தயரதப் பேர்ப்
பராவ அரு நலத்து ஒருவன்,
     மைந்தர்; பழி இல்லார்;
விராவ அரு வனத்து, அவன்
     விளம்ப, உறைகின்றார்;
இராமனும் இலக்குவனும் என்பர்,
     பெயர்' என்றாள்.

     (அவர்கள்) தரா வலய நேமி உழவன் - பூமி முழுவதையும் தன்
ஆட்சிச் சக்கரத்தால் கட்டுப்படுத்தியவனான; தயரதப் பேர் - தயரதன்
என்னும் பெயரை உடைய; பராவரு நலத்து ஒருவன் - புகழ்ந்துரைக்க
ஒண்ணாத சிறப்புக்கள் கொண்ட ஒரு மன்னனது; மைந்தர் - மக்கள்; பழி
இல்லார் -
பழி கூறலாகாத சிறப்புடையவர்; அவன் விளம்ப - அத்
தயரதன் இட்ட கட்டளையால்; விரா வரு வனத்து உறைகின்றார் -
நெருங்குதற்கு அரிய காட்டில் வசிக்கின்றார்கள்; பெயர் இராமனும்
இலக்குவனும் என்பர் -
அவர்கள் முறையே இராமன் என்றும் இலக்குவன்
என்றும் பெயருடையார்; என்றாள் - என்று (சூர்ப்பணகை) கூறினாள்.

     இராமலக்குவர் வனம் புகுந்த வரலாறு கூறினாள்.               57