இராவணன் தன்னைத் தானே பழித்துக் கூறுதல் 3124. | 'மருந்து அனைய தங்கை மணி நாசி வடி வாளால் அரிந்தவரும் மானிடர்; அறிந்தும், உயிர் வாழ்வார்; விருந்து அனைய வாளொடும், விழித்து, இறையும் வெள்காது. இருந்தனன் இராவணன் இன் உயிர்கொடு, இன்னும். |
மருந்தனைய தங்கை - அமுதம் போல் அடியவளான தங்கை சூர்ப்பணகையின்; மணிநாசி - அழகிய மூக்கை; வடிவாளால் அரிந்தவரும் - கூர்வாள் கொண்டு அறுத்தெறிந்தவர்களும்; மானிடர் - (இழிந்த) மனிதர்களே ஆவர்; அறிந்தும் உயிர் வாழ்வார் - (அங்ஙனம்) தாக்கப்பட்டாள் என் தங்கை என அறிந்த பின்னும் உயிர் பிழைத்திருந்தனர்; இராவணன் - இராவணனாகிய நான்; விருந்தனைய வாளொடும் - புதிது போலும் என் வாளொடும்; இன்னும் விழித்து - இன்னும் விழித்துக் கொண்டு; இறையும் வெள்காது - சற்றும் வெட்கமின்றி; இன்னுயிர் கொடு - இனிய உயிரைச் சுமந்து கொண்டு; இருந்தனன் - இருக்கின்றேன்! மனிதர்கள் தீங்கிழைத்த பின்னும் அவர்களை மாய்க்காமல் இருக்கும் தன்னையே நொந்து கொள்கிறான் இராவணன். 58 |