3125. | 'கொற்றம்அது முற்றி, வலியால் அரசு கொண்டேன்; உற்ற பயன் மற்று இதுகொலாம்? முறை இறந்தே முற்ற, உலகத்து முதல் வீரர் முடி எல்லாம் அற்ற பொழுதத்து, இது பொருந்தும் எனல் ஆமே? |
கொற்றம் அது முற்றி - வெற்றி மேல் வெற்றி நிறைந்து; வலியால் அரசு கொண்டேன் - என் ஆற்றலால் இலங்கை ஆட்சியை நிறுவிக் கொண்டேன்; உற்ற பயன் மற்று இது கொலாம் - (இத்தகு பெருமைக்குரிய நான்) அடைந்த பயன் இவ்வளவுதானா?; முறை இறந்தே - என் ஆட்சி முறை அழிந்து போக; முற்ற உலகத்து - முழுவதுமாய் இப்பேருலகின்; முதல் வீரர் முடி எல்லாம் - தலைமை சான்ற வீரர்களுடைய தலைகள் எல்லாம்; அற்ற பொழுதத்து - அறுபட்ட நிலை வந்தாலும்; இது பொருந்தும் எனல் ஆமே - (ஏற்பட்டுள்ள) இழிவு என் தகுதிக்குப் பொருந்தியதாகுமோ? உலகத்து வீரர்கள் தலை இழந்தாலும் தங்கை மூக்கிழந்தமை நேராகுமோ என்பது தோன்ற உரைத்தான். 59 |