3126. | 'மூளும் உளது ஆய பழி என்வயின் முடித்தோர் ஆளும் உளதாம்; அவரது ஆர் உயிரும் உண்டாம்; வாளும் உளது; ஓத விடம் உண்டவன் வழங்கும் நாளும் உள; தோளும் உள; நானும் உளென் அன்றோ? |
மூளும் உளதாய பழி - உருவாகி வந்திருக்கும் அவமானத்தை; என் வயின் முடித்தோர் - என்பால் இழைத்த; ஆளும் உளதாம் - மானிடர்கள் இன்னும் இருந்தனர்; அவரது ஆர் உயிரும் உண்டாம் - அவர்களின் இனிய உயிரும் இன்னும் அழிக்கப்படாமல் இருந்தது; வாளும் உளது - (என் கை) வாளும் வறிதே இருந்தது; ஓதவிடம் உண்டவன் - கடலில் பிறந்த நஞ்சினை உண்ட சிவபெருமான்; வழங்கும் நாளும் உள - அளித்த என் ஆயுட் காலமும் இருந்தது; தோளும் உள நானும் உளென் அன்றோ? - (பயனின்றி) என் தோள்களும் உள்ளன, நானும் (செயலின்றி) இருந்தேன் அல்லவா? வாளும், தோளும் பிறவுமாம் வல்லமை பெற்றிருந்தும் பழிக்கு ஆளானேன் என்ற தன்னிரக்கம் புலப்படுத்தப்படுகிறது. 60 |