3127.'பொத்துற உடற்பழி
     புகுந்தது" என நாணி,
தத்துறுவது என்னை? மனனே!
     தளரல் அம்மா!
எத் துயர் உனக்கு உளது?
     இனி, பழி சுமக்க,
பத்து உள தலைப் பகுதி;
     தோள்கள் பல அன்றே?

    மனனே - என் உள்ளமே! உடல் பொத்துறப் பழி புகுந்தது -
உடலையும் துளைத்துப் பழி சென்று நின்றது; என நாணி - என்று
வெட்கமுற்று; தத்துறுவது என்னை? - ஏன் தடுமாறுகிறாய்?; தளரல் -
சோர்வடையாதே; உனக்கு எத்துயர் உளது? - உனக்கு அவமானம்
சுமக்கும் எவ்விதத் துன்பமும் வேண்டியதில்லை (ஏனெனில்); இனிப் பழி
சுமக்க -
இனிமேல் அப்பழியைத் தாங்க; பத்துள தலைப்பகுதி -
தலைகள் பத்து உள்ளன; தோள்கள் பல அன்றே - தோள்களும் பல
உள்ளன அன்றோ?

     அம்மா - இடைச் சொல் பழி தீர்க்க வேண்டிய தலைப் பாரமும்,
தோள் வலிமையும் உண்டென மொழிகின்றான்.                      61