கரன் முதலியோர் பற்றி இராவணன் வினவல்

3128. என்று உரைசெயா, நகைசெயா,
     எரி விழிப்பான்,
'வன் துணை இலா இருவர்
     மானிடரை வாளால்
கொன்றிலர்களா, நெடிய
     குன்றுடைய கானில்
நின்ற கரனே முதலினோர்
     நிருதர்?' என்றான்.

    என்று உரை செயா - எனக் கூறி; நகை செயா - சிரித்து; எரி
விழிப்பான் -
நெருப்பெழ விழித்து (இராவணன்); நெடிய குன்றுடைய
கானில் -
பெரு மலை சூழ்ந்த கானகத்தில்; நின்ற கரனே முதலினோர்
நிருதர் -
காவலில் நிலை பெற்ற கரன் முதலாகிய அரக்க வீரர்கள்;
வன்துணை இலா இருவர் மானிடரை -  பெருந்துணை ஏதும் இல்லாமல்
எதிர்த்த அவ்விரு மனிதர்களை; வாளால் கொன்றிலர்களா? - வாள் வீசிக்
கொல்ல வில்லையா?; என்றான் - என்று வினவினான்.

     துணை வலிமையும் இல்லாதவர்களை ஆயுத வலிமை கொண்டோர்
தோற்பிக்க வில்லையா என்றான்.                                 62