நடந்ததுபற்றிச் சூர்ப்பணகை கூறல் அறுசீர் ஆசிரிய விருத்தம் 3129. | அற்று அவன் உரைத்தலோடும், அழுது இழி அருவிக் கண்ணள், எற்றிய வயிற்றள், பாரினிடை விழுந்து ஏங்குகின்றாள், 'சுற்றமும் தொலைந்தது, ஐய! நொய்து' என, சுமந்து கையள், உற்றது தெரியும்வண்ணம், ஒருவகை உரைக்கலுற்றாள்: |
அற்று அவன் உரைத்தலோடும் - அவ்வாறு (இராவணன்) கூறிய மாத்திரத்தில்; அழுது இழி அருவிக் கண்ணள் - அழுவதால் வழியும் அருவி போன்ற கண்ணீரை உடையவளாய் (சூர்ப்பணகை) ; எற்றிய வயிற்றள் - (கைகளால்) அடிக்கப்படும் வயிற்றை உடையவளாய்; பாரினிடை விழுந்து ஏங்குகின்றாள் - நிலத்தின் மேல் விழுந்து புரண்டு அழுகின்றவளாய்; 'ஐய - ஐயனே; சுற்றமும் நொய்து தொலைந்தது - (காவல் நின்ற) உறவும் விரைவில் அழிந்து போனது; எனச் சுமந்த கையள்- எனத் தலை மீது கையை வைத்தவாறு; உற்றது தெரியும் வண்ணம் - (கரன் முதலியோருக்கு) நேர்ந்த அழிவின் வரலாறு விளங்கும்படியாக; ஒரு வகை உரைக்கலுற்றாள் - ஒருவாறு தொகுத்துக் கூறலாயினாள். 63 |