3130. | ' "சொல்" என்று என் வாயில் கேட்டார்; தொடர்ந்து எழு சேனையோடும் "கல்" என்ற ஒலியில் சென்றார், கரன் முதல் காளை வீரர்; எல் ஒன்று கமலச் செங் கண் இராமன் என்று இசைத்த ஏந்தல் வில் ஒன்றில், கடிகை மூன்றில், ஏறினர் விண்ணில்' என்றாள். |
கரன் முதல் காளை வீரர் - கரன் முதலிய இளங்காளைகளான வீரர்கள்; சொல் என்று என் வாயில் கேட்டார் - நேர்ந்தது சொல் என்று என் வாய்மொழியைக் கேட்ட உடனே; தொடர்ந்து எழு சேனையோடும்- இடைவிடாது வரும் படைகளோடும்; கல்லென்ற ஒலியில் சென்றார் - கல்லென்ற பேரொலி முழங்கப் புறப்பட்டனர்; எல் ஒன்று கமலம் - ஒளிக்கதிர் பட்டு விரிந்த தாமரை போலும்; செங்கண் இராமன் - சிவந்த கண்களை உடைய இராமன்; என்று இசைத்த ஏந்தல் - எனப் பெயர் பெற்ற தலைவனின்; வில் ஒன்றில் கடிகை மூன்றில் - புகழ் பெற்ற வில்லால் மூன்றே நாழிகையில்; ஏறினர் விண்ணில் என்றாள் - இறந்து விண்ணுலகடைந்தனர் எனக் கூறினாள். இராமன் வில்லாற்றல் விளங்க, சென்றவர் மூன்றே நாழிகையில் மடிந்தார் என விரைவு தோன்றக் கூறினாள். இந்த நிலையிலும் கூட இராமன் அழகிலும் வீரத்திலும் சூர்ப்பணகை கொண்ட கவர்ச்சி தெளிவாக விளங்குகிறது. 64 |