3131. | தாருடைத் தானையோடும் தம்பியர், தமியன் செய்த போரிடை, மடிந்தார் என்ற உரை செவி புகாதமுன்னம், காரிடை உருமின், மாரி கனலொடு பிறக்குமாபோல் நீரொடு நெருப்புக் கான்ற, நிரை நெடுங் கண்கள் எல்லாம். |
தமியன் செய்த போரிடை - இராமன் ஒருவனாகவே செய்த போரில்; தாருடைத் தானையோடும் தம்பியர் - மாலைகள் சூடிய வீரர்களோடு கரன் முதலிய தம்பிமார்கள்; மடிந்தார் - மரணமுற்றார்; என்ற உரை - என்னும் மொழி; செவி புகாத முன்னம் - தன் காதில் விழு முன்னர்; காரிடை மாரி - மேகங்களில் பிறந்த மழை; உருமின் கனலொடு - இடி மின்னல் நெருப்புக்களோடு; பிறக்குமா போல் - தோன்றினாற் போல; நிறை நெடுங் கண்கள் எல்லாம் - நிறைந்த பெரிய கண்கள் எல்லாவற்றிலும்; நீரொடு நெருப்புக் கான்ற - கண்ணீரும் கனலும் வீசின. சோகத்தால் கண்ணீரும், கோபத்தால் நெருப்பும் பிறந்தமைக்கு மழையும் இடி மின்னல்களும் பிறந்த மேகத்தை உவமையாக்கினார். 65 |