இராவணன் வினாவும் சூர்ப்பணகை விளக்கமும்

3132. ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய
     துன்பம் மாறி,
தீயிடை உகுத்த நெய்யின்,
     சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய,
'நீ இடை இழைத்த குற்றம் என்னைகொல்,
     நின்னை, இன்னே,
வாயிடை இதழும் மூக்கும் வலிந்து
     அவர் கொய்ய?' என்றான்.

    ஆயிடை - அவ்வமயம்; எழுந்த சீற்றத்து - உண்டாகிய கோபத்தில்;
அழுந்திய துன்பம் மாறி - அனுபவித்த துயரம் நீங்கி; தீயிடை உகுத்த
நெய்யின் -
நெருப்பிலே விழுந்த நெய்போல; சீற்றத்திற்கு ஊற்றம்
செய்ய -
(துயரம் குறைந்த இடத்தில்) கோபம் வலிமை கொள்ள;
(இராவணன் சூர்ப்பணகையிடம்); அவர் வலிந்து - இராம இலக்குவர் பலம்
கொண்டு; நின்னை இன்னே - உன்னை இவ்வாறு; வாயிடை இதழும்
மூக்கும் கொய்ய -
காதின் மடலும் மூக்கும் அரிய; நீ இடை இழைத்த
குற்றம் -
நீ அவர்கள்பாற் செய்த தவறு; என்னைகொல் - யாதேனும்
உண்டோ; என்றான் - என்று கேட்டான்.

     ஊற்றம் - ஊன்று கோல். ஓசை உட்புகும் வழியாதலால் செவியை
வாய் என்றும் செவிமடலை இதழ் என்றும் மொழிந்தார்.               66