3133. | 'என்வயின் உற்ற குற்றம், யாவர்க்கும் எழுத ஒண்ணாத் தன்மையன் இராமனோடும் தாமரை தவிரப்போந்தாள், மின்வயின் மருங்குல் கொண்டாள், வேய்வயின் மென் தோள் கொண்டாள், பொன்வயின் மேனி கொண்டாள், பொருட்டினால் புகுந்தது' என்றாள். |
(அதற்குச் சூர்ப்பணகை) என் வயின் உற்ற குற்றம் - என்னிடத்தில் நேர்ந்த பிழை யாதெனில்; தாமரை தவிர - தன் இருக்கையான தாமரைப் பூவை விட்டு; யாவர்க்கும் எழுத ஒண்ணாத் தன்மையன் இராமனோடும் - எத்தகு திறன்மிக்க ஓவியனாலும் எழுதிக் காட்ட முடியாத எழில் மிக்க இராமனுடன்; போந்தாள் - வந்தவளும்; மின் வயின் மருங்குல் கொண்டாள் - மின்னலிடம் இடையைப் பெற்றவளும்; வேய் வயின் மென்றோள் கொண்டாள் - மூங்கிலினிடம் மெல்லிய தோள்களைப் பெற்றவளும்; பொன் வயின் மேனி கொண்டாள் பொருட்டினால் - செம்பொன்னிடத்தில் தனி உடலைக் கொண்டவளுமான ஒருத்தி காரணமாக; புகுந்தது என்றாள் - நேர்ந்தது எனச் சொன்னாள். நான் உனக்காக இராமனுடன் வந்த கட்டழகியைக் கருதியதுதான் குற்றம் என மறைமுகமாகக் கூறினாள். குலமுறை கிளத்து படலத்துள் எழுதரிய திருமேனி (657) என்றும் வாலி வதைப் படலத்துள் ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய் என்றும் முறையே (4020) இராமன் அழகு கூறப்பட்டது. அடுக்கிக் கூறிய உவமைகளால் சீதையின் அழகு ஓர் உவமையில் அடங்குவதன்று என உணர்த்தினார். 67 |