பிராட்டியின் அழகினை சூர்ப்பணகை விரித்துக் கூறுதல்

3134.'ஆர் அவள்?' என்னலோடும்,
     அரக்கியும், 'ஐய! ஆழித்
தேர், அவள் அல்குல்; கொங்கை, செம்
     பொன் செய் குலிகச் செப்பு;
பார் அவள் பாதம் தீண்டப்
     பாக்கியம் படைத்தது அம்மா!
பேர் அவள், சீதை' என்று வடிவு
     எலாம் பேசலுற்றாள் :

    (அது கேட்டு ஆர்வமுற்ற இராவணன்) ஆர் அவள் என்ன
லோடும் -
அந்தப் பெண் யார் என்று கேட்டவுடன்; அரக்கியும் -
சூர்ப்பணகையும்; ஐய - ஐயனே; அவள் அல்குல் ஆழித்தேர் -
அவளுடைய அல்குல் சக்கரம் பூட்டிய தேர் போலும்; கொங்கை செம்
பொன் செய் குலிகச் செப்பு
- அவளுடைய மார்பகங்கள் தங்கத்தால்
செய்யப்பட்ட குங்குலியச் செப்புப் போலும்; அவள் பாதம் தீண்டப் பார்
பாக்கியம் படைத்தது -
அவள் திருவடி பட பூமி புண்ணியம் செய்தது
போலும்; அம்மா - வியப்பு இது; அவள் பேர் சீதை - அவள் பெயரோ
சீதையாம்; என்று வடிவெலாம் பேசலுற்றாள் - எனச் சீதையின் அழகு
நலங்களை உரைக்கத் தொடங்கினாள்.

     இராவணன் ஆசைத் தீயை வளர்க்க நெய் சொரிந்தாற் போல்
இவ்வங்க வருணனைகள் அமைந்துள்ளன.                        68