3135. | 'காமரம் முரலும் பாடல், கள், எனக் கனிந்த இன் சொல்; தே மலர் நிறைந்த கூந்தல்; "தேவர்க்கும் அணங்கு ஆம்" என்னத் தாமரை இருந்த தையல், சேடி ஆம் தரமும் அல்லள்; யாம் உரை வழங்கும் என்பது ஏழைமைப்பாலது அன்றோ? |
(அவளுடைய) கள் எனக் கனிந்த இன்சொல் - மதுவைப் போல் மயக்கமூட்டும் இனிய மொழிகள்; காமரம் முரலும் பாடல் - காமரம் என்னும் பண்ணிசை கமழும் பாடலை ஒக்கும்; தேமலர் நிறைந்த கூந்தல்- இனிய மலர்கள் சூடப் பெற்ற கூந்தலை உடைய (அவள்); தேவர்க்கும் அணங்கு ஆம் - தேவமாதரும் போற்றும் அழகுமிக்கவளாம்; என்ன - என்று சொல்லும்படி; தாமரை இருந்த தையல் - தாமரை மலரில் வசிக்கும் திருமகளும்; சேடி ஆம் தரமும் அல்லள் - தோழியாதற்குக் கூடத் தகுதி அற்றவள்; யாம் உரை வழங்கும் என்பது - அவளுடைய அழகைக் குறித்து நான் எடுத்துச் சொல்லக் கருதுவது; ஏழைமைப் பாலது அன்றோ?- அறியாமையின் பாற்பட்டது ஆகும் அன்றோ? மானுடப் பெண்களினும் தேவமாதர் அழகுடையார். தேவமாதர்க்கும் தலைவியாய், திருமகள் தாதியாம் தரமும் பெறாமற் போமளவு சிறந்த எழிலுடையாள் சீதை எனக் கூறுகின்றாள். 69 |