3136. | மஞ்சு ஒக்கும் அளக ஓதி; மழை ஒக்கும் வடிந்த கூந்தல்; பஞ்சு ஒக்கும் அடிகள்; செய்ய பவளத்தின் விரல்கள்; ஐய! அம் சொற்கள் அமுதின் அள்ளிக் கொண்டவள் வதனம் மை தீர் கஞ்சத்தின் அளவிற்றேனும், கடலினும் பெரிய கண்கள்! |
அம் சொற்கள் - அழகிய சொற்களை; அமுதின் அள்ளிக் கொண்டவள் - அமுதத்திலிருந்து முகந்தெடுத்துக் கொண்ட அம்மங்கையின்; அளக ஓதி - கூந்தல்; மஞ்சு ஒக்கும் - மேகத்தை நிகர்க்கும்; வடிந்த கூந்தல் - முடியாது தாழ்ந்த கூந்தலோ; மழை ஒக்கும் - (இறங்கும்) மழைக்கார் போன்றிருக்கும்; அடிகள் பஞ்சுஒக்கும் - பாதங்கள் செம்பஞ்சினைப் போன்றிருக்கும்; விரல்கள் செய்ய பவளத்தின் ஐய - விரல்கள் சிவந்த பவளத் துண்டுகள் போல அழகானவை; வதனம் - முகம்; மை தீர் கஞ்சத்தின் அளவிற்றேனும் - களங்கமற்ற தாமரைப்பூ அளவினதாயினும்; கண்கள் கடலினும் பெரிய - (அம்முகத்துக்) கண்களோ கடலைக் காட்டிலும் பெரியவை. கடலினும் பெரிய கண்கள் - உயர்வு நவிற்சி அணி. அளகம் - ஐவகைக் கூந்தல் முடிப்புகளில் ஒன்று முன் நெற்றி மயிர் என்பர் வாடுதல், முள்ளுடைமை, சேற்றில் பிறத்தல் போன்ற குற்றங்கள் தாமரைக்குக் கூற முடியும். முகத்தின் அளவினும் கண்களைப் பெரிதாகக் கூறுதற்குக் காரணம் அவற்றின் உயிர்த் தன்மையும் பார்வை அகற்சியும் கருதி. 'கேட்டார் பிற செயல்களை மறந்து நிற்றலின் அமிழ்தத்தை உவமை கூறினார் என்று ஐயரவர்கள் (குறுந். 206) எழுதிய குறிப்பு நினையத்தக்கது. அளக ஓதி - இருபெயரொட்டுப் பண்புத் தொகை. 70 |