3137.' "ஈசனார் கண்ணின் வெந்தான்"
     என்னும் ஈது இழுதைச் சொல்; இவ்
வாசம் நாறு ஓதியாளைக் கண்டனன்,
     வவ்வல் ஆற்றான்,
பேசல் ஆம் தகைமைத்து அல்லாப் பெரும்
     பிணி பிணிப்ப, நீண்ட
ஆசையால் அழிந்து தேய்ந்தான்
     அனங்கன், அவ் உருவம் அம்மா!

    அனங்கன் - உருவிலியாகிய மன்மதன்; ஈசனார் கண்ணின்
வெந்தான் -
சிவபிரான் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டான் என்பது;
என்னும் ஈது இழுதைச் சொல்- என்று சொல்லப்படும் இச் செய்தி பொய்ச்
செய்தியாகும்; (உண்மை யாதெனில்); இவ் வாசம் நாறு ஓதியானை - இந்த
மணம் கமழும் கூந்தலுடைய சீதையை; கண்டனன் - கண்டு (மோகமுற்று) ;
வவ்வல் ஆற்றான் - கவர்ந்து செல்ல இயலாதவனாகி; பேசல் ஆம்
தகைமைத்து அல்லா -
வெளியே சொல்லவும் முடியாத; பெரும் பிணி
பிணிப்ப -
காமப் பெரு நோய் பற்றிக் கொள்ள; நீண்ட ஆசையால் -
மிகுதியான ஆசையினாலே; அவ் வுருவம் அழிந்து தேய்ந்தான் -
அழகிய மேனி மெலிவுற்று அழிந்தான்; அம்மா - வியப்பு!

     உண்மையாக மன்மதன் உருவிலியான காரணம் ஒன்றாக இருக்க
மற்றொன்றைக் காரணமாக்குதல் ஒழிப்பு அணி. சீதையைக் கவரும் ஆற்றல்
மன்மதனுக்கு இல்லை என்று சொல்லி, அதனைச் செய்யுமாறு இராவணனை
மறைமுகமாகத் தூண்டுகிறாள்.                                    71