3139.'தோளையே சொல்லுகேனோ? சுடர்
     முகத்து உலவுகின்ற
வாளையே சொல்லுகேனோ?
     அல்லவை வழுத்துகேனோ?
மீளவும் திகைப்பதல்லால், தனித்தனி
     விளம்பல் ஆற்றேன்;
நாளையே காண்டி அன்றே? நான்
     உனக்கு உரைப்பது என்னோ?

    தோளையே சொல்லுகேனோ? - (அவளுடைய) தோளின் அழகை
எடுத்துக் கூறுவேனோ?; சுடர் முகத்து உலவுகின்ற வாளையே
சொல்லுகேனோ? -
ஒளி வீசும் முகத்தில் திரிகின்ற வாளை மீன் போன்ற
கண்ணழகை எடுத்துக் கூறுவேனோ?; அல்லவை வழுத்துகேனோ? -
அல்லாது பிற உறுப்புக்களை எடுத்துக் கூறுவேனோ?; மீளவும் திகைப்பது
அல்லால் -
மறுபடியும் திகைத்துப் போகின்றேனே அன்றி; தனித் தனி
விளம்பல் ஆற்றேன் -
ஒவ்வோர் உறுப்பழகையும் தனியே வருணிக்க
வலிமை இல்லேன்; நான் உனக்கு உரைப்பது என்னோ? - நான் உனக்கு
விவரித்துச் சொல்ல வேண்டுவது யாதுமில்லை; நாளையே காண்டி
அன்றே -
நாளைக்கு நீயே காணப் போகின்றாய் அல்லவா?

     இவ்வாறு கூறுவதன் மூலம் சீதையைக் காணும் ஆவலை இராவணன்
உள்ளத்தே மூட்டுகின்றாள்.                                     73