3140. | 'வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல் ஒக்கும் விழி என்றாலும், பல் ஒக்கும் முத்து என்றாலும், பவளத்தை இதழ் என்றாலும், சொல் ஒக்கும்; பொருள் ஒவ்வாதால்; சொல்லல் ஆம் உவமை உண்டோ? "நெல் ஒக்கும் புல்" என்றாலும், நேர் உரைத்து ஆகவற்றோ! |
வில் ஒக்கும் நுதல் என்றாலும் - வில்லைப் போல் நெற்றி அமைந்திருக்கிறது என்று சொன்னாலும்; விழி வேல் ஒக்கும் என்றாலும்- கண்கள் வேல் போல் விளங்குகின்றன என்று சொன்னாலும்; பல் முத்து ஒக்கும் என்றாலும் - பற்கள் முத்துக்கள் போன்றிருக்கும் என்று சொன்னாலும்; பவளத்தை இதழ் என்றாலும் - பவளமே இவள் இதழ்கள் என்று சொன்னாலும்; சொல் ஒக்கும் - உவமிக்கப்படும் சொல் பொருத்தம் ஆகலாம்; (அல்லாது); பொருள் ஒவ்வாதால் - (சீதையின் உறுப்பழகை உணர்த்தும் முழுமையான) பொருளால் பொருந்தாது; சொல்லல் ஆம் உவமை உண்டோ - (எனவே) சொல்லத்தக்க உவமை வேறு ஏதேனும் உளதாகுமோ? (இல்லை) ; புல் ஒக்கும் நெல் - புல்லைப் போன்றிருக்கும் நெல்; என்றாலும் - என்று கூறினாலும்; நேர் உரைத்தாக அற்றோ? - பொருத்தமாக கூறியதாகக் கருத முடியுமா? (பொருந்தாது). வருணனைக்கு அப்பாற்பட்ட பொலிவும் அழகும் சீதைபால் பொருந்தியுள்ளன எனவும், அதனால் நீயே நேரிற் காண்பதே பொருத்தம் எனவும் சூர்ப்பணகை உணர்த்துகின்றாள். 74 |