இராவணன் காமுறும் வண்ணம் சூர்ப்பணகை உரையாற்றுதல் 3141. | 'இந்திரன் சசியைப் பெற்றான்; இரு- மூன்று வதனத்தோன்தன் தந்தையும் உமையைப் பெற்றான்; தாமரைச் செங்கணானும் செந் திருமகளைப் பெற்றான்; சீதையைப் பெற்றாய் நீயும்; அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே; ஐயா! |
ஐயா - ஐயனே; இந்திரன் சசியைப் பெற்றான் - தேவேந்திரன் சசியை மனைவியாகப் பெற்றான்; இருமூன்று வதனத்தோன் தன் தந்தையும் - ஆறுமுகங்களை உடைய முருகனின் தந்தையாகிய சிவபெருமானும்; உமையைப் பெற்றான் - உமையம்மையாரைத் துணைவியாகப் பெற்றான்; தாமரைச் செங்கணானும் - செந்தாமரைக் கண்ணோனான திருமாலும்; செந்திருமகளைப் பெற்றான் - சிவந்த இலக்குமி தேவியை மனைவியாக அடைந்தான்; நீயும் சீதையைப் பெற்றாய்- (இராவணனாகிய) நீயும் சீதையை மனைவியாக அடைந்து விட்டாய்; அந்தரம் பார்க்கின் - (உங்களுள்) அழகிய உயர்வுற்றார் யாரெனப் பார்த்தால்; நன்மை உனக்கே - (சீதையைப் பெறுவதால் கிடைக்கும்) நலங்களெல்லாம் உன்னையே அடைந்தன; அவர்க்கு இல்லை - (முன்னர் குறித்த) தேவர்களுக்கு இத்தகைய பேறு வாய்க்கவில்லை. பிற தெய்வ மாதர்களினும் சீதை உயர்ந்தவள் எனச் சுட்டிக் காட்டினாள். இன்னும் சீதையை இராவணன் அடையாத போதும் 'பெற்றாய்' என இறந்த காலத்தால் பேசினாள். அவளை அடைய வேண்டும் விரைவை உணர்த்தும் முறையிலும், இராவணன் நினைத்தால் அவளை அடைவது திண்ணம் என அவன் வலிமையை உணர்த்தும் முறையிலும் இவ்வாறு கூறனாள் சூர்ப்பணகை. குறிப்பு மொழியாக, 'அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு! உனக்கு இலை!' என்றும் பிரித்துப் பொருள் கொள்ளுமாறு பாடல் அமைந்துள்ளது. 75 |