3142. | 'பாகத்தில் ஒருவன் வைத்தான்; பங்கயத்து இருந்த பொன்னை ஆகத்தில் ஒருவன் வைத்தான்; அந்தணன் நாவில் வைத்தான்; மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை- மாகத் தோள் வீர!-பெற்றால், எங்ஙனம் வைத்து வாழ்தி? |
ஒருவன் - (சிறப்புக்குரிய) சிவபெருமான் (தன் தேவியை); பாகத்தில் வைத்தான் - தன் இடப்பாகத்தில் வைத்துப் பெருமை கொண்டான்; ஒருவன் - (மற்றொரு தெய்வமாகிய) திருமால்; பங்கயத்து இருந்த பொன்னை - தாமரையில் வசிக்கும் பொன்மகளாகிய திருவை; ஆகத்தில் வைத்தான் - மார்பில் அமர்த்திப் போற்றினான்; அந்தணன் - பிரம்ம தேவன்; நாவில் வைத்தான் - தன் நாவில் குடியிருத்திச் சிறப்புற்றான்; மாகத் தோள் வீர! - விண்ணளவு உயர்ந்த தோள்களைப் பெற்ற வீரனே!; மேகத்தில் பிறந்த மின்னை - மழை முகில்களிடையில் உதிக்கும் மின்னலை; வென்ற நுண் இடையினாளை - வெற்றி கொள்ளும் மெல்லிய இடையைப் பெற்ற சீதையை; பெற்றால் - அடைந்து விட்டாயானால்; எங்ஙனம் வைத்து வாழ்தி? - (மற்றத் தெய்வப் பெண்களினும் மேம்பட்டவள், ஆதலால்) எங்கே இருத்தி நீ வாழ இருக்கின்றாயோ? இப்பாடலிலும் இராவணனுக்கு நேரவிருக்கும் அழிவு குறிப்பால் உணர்த்தப் பெறுகின்றது. 'எங்ஙனம் வைத்து வாழ்தி'? என்னும் வினா, 'உன்னால் வாழ முடியாது' என்ற குறிப்புப் பொருளைத் தந்து நிற்கின்றது. 76 |