| 3143. | 'பிள்ளைபோல் பேச்சினாளைப் பெற்றபின், பிழைக்கலாற்றாய்; கொள்ளை மா நிதியம் எல்லாம் அவளுக்கே கொடுத்தி; ஐய! வள்ளலே! உனக்கு நல்லேன்; மற்று, நின் மனையில் வாழும் கிள்ளைபோல் மொழியார்க்கு எல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றே? |
ஐய - ஐயனே; பிள்ளை போல் பேச்சினாளை - மழலை போல இனிமையாகப் பேசுகின்ற சீதையை; பெற்றபின் - அடைந்த பின்னர்; பிழைக்கலாற்றாய் - (அவள் அருகிருப்பதால்) எப் பிழையும் நீ செய்ய மாட்டாய்; வள்ளலே - கொடை நலம் உடையவனே; கொள்ளை மாநிதியம் எல்லாம் - மிகுதியாக நிறைந்துள்ள உன் செல்வம் அனைத்தையும்; அவளுக்கே கொடுத்தி - (அன்பு காரணமாக) அவளுக்கே தந்து விடுவாய்; உனக்கு நல்லேன் - (என் தூண்டுதலால் அவளை அடைந்து அவளுக்கே செல்வம் தருவதால்) உனக்கு நான் நன்மை செய்தவள் ஆகிறேன்; மற்று - மாறாகக் கூறுமிடத்து; நின் மனையில் வாழும் - உன் அரண்மனையில் வாழ்கின்ற; கிள்ளை போல் மொழியார்க்கு எல்லாம் - கிளி போல் மிழற்றும் உன் மகளிர் அனைவருக்கும்; கேடு சூழ்கின்றேன் அன்றே? - தீமையை விளைவிக்கின்றேன்? அன்றோ? எப்போதும் திறந்து கிடக்கும் களஞ்சியமாதலால் பலராலும், பலகாலும் எடுத்துச் சொல்லப்படும் செல்வம் என்பதால் 'கொள்ளை போகின்றசெல்வம்' என்றும் இனிப் பகைவரால் கொள்ளையிடப்பட இருக்கின்றசெல்வம் என்றும் கூறுவதாகவும் கொள்ளலாம். 'பிழைக்கலாற்றாய்' என்பதில் இறந்து படுவாய் என்றும், 'கேடு சூழ்கின்றேன்' என்பதில் மெய்யாகவே தீங்கு செய்கின்றேன் என்றும்குறிப்புப் பொருள்கள் பொதிந்துள்ளன. கம்பரின் சொல்லாற்றலைப்புலப்படுத்தும் இச் சிறந்த பாடல் குறிப்பு நயமும் நாடகப் பாங்கும்கொண்டது. 77 |