3144.'தேர் தந்த அல்குல் சீதை, தேவர்தம்
     உலகின், இம்பர்,
வார் தந்த கொங்கையார்தம் வயிறு
     தந்தாளும் அல்லள்;
தார் தந்த கமலத்தாளை, தருக்கினர்
     கடைய, சங்க
நீர் தந்தது; அதனை வெல்வான் நிலம்
     தந்து நிமிர்ந்தது அன்றே.

    தேர் தந்த அல்குல் சீதை - தேர் போன்ற அல்குலை உடைய
சீதை; தேவர் தம் உலகின் - அமரர் உலகத்திலும்; இம்பர் - இந்த
மண்ணுலகத்திலும் இருக்கும்; வார் தந்த கொங்கை யார் தம் - கச்
சணிந்த மார்பினை உடைய பெண்களின்; வயிறு தந்தாளும் அல்லள் -
வயிற்றில் பிறந்தவளும் அல்லள்; (வேறு எவ்வாறு பிறந்தாள் எனில்); சங்க
நீர் -
சங்குகளை உடைய திருப்பாற்கடல்; தருக்கினர் கடைய - செருக்கு
மிக்க தேவர்களும் அசுரர்களும் (தன்னைக்) கடைந்த போது; தார் தந்த
கமலத்தாளை -
மலர்ந்த தாமரையில் வாழ்கின்ற திருமகளை; தந்தது -
அளித்தது; அதனை வெல்வான் - அக்கடலின் இக்கொடையை வெல்லும்
பொருட்டு; நிலம் - பூமியானது; தந்து நிமிர்ந்தது - சீதையை அளித்துப்
பெருமையால் உயர்ந்தது. (அன்றே - ஈற்றசை).

     திருப்பாற் கடல் திருமகளைத் தந்த சிறப்பை வெல்வதற்காகப் பூமி
சீதையை அளித்தது என்பது கருத்து. இது தற்குறிப்பேற்ற அணி.

     சங்க நீர் - சங்கு போல் வெளுத்த பாற்கடல் என்றும் கூறலாம். தந்த
என்ற சொல் முதல் அடியில் உவமை உருபாகவும், இரண்டாம் அடியில்
அணிந்த என்ற பொருளிலும், மூன்றாவது அடியில் பூத்த என்ற
பொருளிலும் வருகின்றது.                                       78