3145. | 'மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த, தேன் கொண்டு ஊடாடும் கூந்தல், சிற்றிடை, சீதை என்னும் மான் கொண்டு ஊடாடு நீ; உன் வாள் வலி உலகம் காண, யான் கொண்டு ஊடாடும்வண்ணம், இராமனைத் தருதி என்பால். |
மீன்கொண்டு ஊடாடும் வேலை - மீன்களைத் தன்னகத்தே கொண்டு அசையும் கடலினை; மேகலை - மேகலை அணியாகப் பெற்றிருக்கும்; உலகம் - உலக மக்கள்; ஏத்த - புகழும் வண்ணம்; தேன் கொண்டு ஊடாடும் கூந்தல் - வண்டுகள் மணம் நாடித் தேடி வந்து ஆடும் கூந்தலையும்; சிற்றிடை - சிறிய இடையையும் உடைய; சீதை என்னும் மான் - சீதையென்னும் மான் போன்றவளை; நீ கொண்டு ஊடாடு - நீ மனைவியாகக் கொண்டு அவளோடு மகிழ்ந்திருப்பாயாக; உன் வாள் வலி உலகம் காண - உன்னுடைய வாளாற்றலை உலகம் கண்டு வியக்கும்படியாக; யான் கொண்டு ஊடாடும் வண்ணம் - நான் துணைவனாகக் கொண்டு மகிழ்ந்திருக்குமாறு; இராமனை என்பால் தருதி - இராமனை எனக்குக் கொடுப்பாயாக. உன் வலிமையால் இராமனையும் சீதையையும் கைப்பற்றி அவனை எனக்குத் தந்து, அவளை நீ எடுத்துக்கொள் எனத் தன் காம நோக்கை வெட்கமின்றிக் கூறினாள். 79 |