3146.'தருவது விதியே என்றால், தவம்
     பெரிது உடையரேனும்,
வருவது வருநாள் அன்றி,
     வந்து கைகூட வற்றோ?
ஒருபது முகமும், கண்ணும், உருவமும்,
     மார்பும், தோள்கள்
இருபதும், படைத்த செல்வம் எய்துதி
     இனி, நீ, எந்தாய்!

    எந்தாய் - என் ஐயனே; தருவது - உரிய காலத்தில் எதனையும்
தருவது; விதியே - ஊழ்வினையே ஆகும்; என்றால் - அவ்வாறாயின்;
தவம் பெரிது உடையரேனும் - பெரிய தவ வலிமை பெற்றவர்களாயினும்;
வருவது - வர வேண்டும் நலங்கள்; வருநாள் அன்றி வந்து கைகூட
வற்றோ -
உரிய காலம் வரு முன் வந்து கையிற் சேர முடியுமோ?
(முடியாது); ஒருபது முகமும் - பத்து முகங்களும்; இருபது கண்ணும்
தோள்கள் -
இருபது கண்களும் இருபது தோள்களும்; மார்பும் உருவமும்-
வீர மார்பும் பொலிவு மிக்க உருவமும்; படைத்த - நீ வரத்தால்
பெற்றதனுடைய; செல்வம் - (உண்மையான) சிறப்பை; இனி நீ எய்துதி -
(சீதையைப் பெறுவதால்) இனிமேல் தான் நீ அடைய இருக்கின்றாய்.

     எல்லையற்ற அழகுடைய சீதையின் நலம் நுகரப் போதாதென்றே
பத்து முகம், இருபது கண்கள். இருபது தோள்கள் உற்றாய் என்று
உயர்த்திக் கூறினாள்.                                         80