3147. | 'அன்னவள்தன்னை நின்பால் உய்ப்பல் என்று எடுக்கலுற்ற என்னை, அவ் இராமன் தம்பி இடைப் புகுந்து, இலங்கு வாளால் முன்னை மூக்கு அரிந்து விட்டான்; முடிந்தது என் வாழ்வும்; உன்னின் சொன்னபின், உயிரை நீப்பான் துணிந்தனென்' என்னச் சொன்னாள். |
அன்னவள் தன்னை - அத்தகு தன்மையுடைய சீதையை; நின் பால் உய்ப்பல் என்று - உன்னிடம் கொண்டு சேர்ப்பேன் என்று; எடுக்கலுற்ற என்னை - எடுத்துவர முற்பட்ட என்னை; அவ்விராமன் தம்பி - அந்த இராமனுடைய தம்பியான இலக்குவன்; இடைப் புகுந்து - குறுக்கே நுழைந்து; இலங்கு வாளால் - ஒளிவீசும் தன் வாளால்; முன்னை - முதலில்; மூக்கு அரிந்து விட்டான் - (என்) மூக்கினை அறுத்து விட்டான்; என் வாழ்வும் முடிந்தது - (அப்போதே) என் வாழ்க்கையும் முற்றுப் பெற்றது; உன்னின் சொன்ன பின் - (ஆயினும்) உன்னிடம் நிகழ்ந்தவற்றைச் சொன்ன பிறகு; உயிரை நீப்பான் துணிந்தனென் - என் உயிரை விட்டு விடலாம் என முடிவு செய்தேன்; என்னச் சொன்னாள் - என்று (சூர்ப்பணகை) கூறினாள். 81 |