இராவணன் காம வெறியன் ஆதல்

3148.கோபமும், மறனும், மானக் கொதிப்பும்,
     என்று இனைய எல்லாம்,
பாபம் நின்ற இடத்து நில்லாப்
     பெற்றிபோல், பற்று விட்ட;
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல்
     ஆம் செயலின், புக்க
தாபமும் காமநோயும் ஆர் உயிர்
     கலந்த அன்றே.

    பாபம் நின்ற இடத்து - பாவம் நிலைபெற்ற இடத்தில்; நில்லாப்
பெற்றி போல் -
நிற்கமாட்டாத பெருமைகளைப் போல; கோபமும்
மறனும் மானக் கொதிப்பும் -
சினமும், வீரமும், மானத்தால் விளையும்
மனக் கொதிப்பும்; என்று இனைய எல்லாம் - என்னும் இப் பண்புகள்
எல்லாம்; பற்று விட்ட - (இராவணனின் காமம் காரணமாக) தொடர்பு விட்டு
நீங்கின; தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் ஆம் செயலின் - ஒரு
விளக்கு மற்றொரு விளக்கை அடைந்ததென்று சொல்லத்தக்க வண்ணம்; புக்க
-
உள்ளத்தில் நுழைந்த; காம நோயும் தாபமும் - காம நோயும் அதனால்
விளைந்த தவிப்பும்; ஆர் உயிர் கலந்த அன்றே - (இராவணனின்) அரிய
உயிரில் அப்போதே கலக்கலாயின.

     தங்கைக்கு விளைவிக்கப்பட்ட துன்பம் கருதி எழுந்த சினம், வீரம்,
கொதிப்பு என்பனவெல்லாம் காமத்தால் வெற்றி கொள்ளப்பட்டன.       82