3149. கரனையும் மறந்தான்; தங்கை
     மூக்கினைக் கடிந்து நின்றான்
உரனையும் மறந்தான்; உற்ற பழியையும்
     மறந்தான்; வெற்றி
அரனையும் கொண்ட காமன்
     அம்பினால், முன்னைப் பெற்ற
வரனையும் மறந்தான்; கேட்ட
     மங்கையை மறந்திலாதான்.

    கேட்ட மங்கையை மறந்திலாதான் - (சூர்ப்பணகை வாயிலாகக்)
கேள்விப்பட்ட சீதையென்னும் பெண்ணை மட்டும் மறவாமலிருக்கும்
இராவணன்; அரனையும் வெற்றி கொண்ட காமன் அம்பினால் -
சிவபெருமானையும் வெற்றி கொண்டதாகிய மன்மதனின் மலரம்பினால் (காம
வயப்பட்டு); கரனையும் மறந்தான் - (தன் வட திசைக் காவற்படைத்
தலைவனாகிய) கரன் மாண்டு போனதையும் மறந்து போனான்; தங்கை
மூக்கினைக் கடிந்து நின்றான் -
தன் தங்கையாகிய சூர்ப்பணகையின்
மூக்கை அறுத்து எறிந்தவன்; உரனையும் மறந்தான் - வலிமையையும்
மறந்து போனான்; உற்ற பழியையும் மறந்தான் - (அதனால் தனக்கு)
நேர்ந்த பழியையும் மறந்து போனான்; முன்னைப் பெற்ற வரனையும்
மறந்தான் -
முன்பு (தான் தவம் செய்து) பெற்ற வரங்களின் ஆற்றலையும்
மறந்து போனான்.

     காமத்தால் அனைத்தையும் மறந்தவன் சீதையை மட்டும்மறக்கவில்லை
என்று காட்டினார். காமன் அம்புகள் - தாமரை, மா,அசோகு, நீலோற்பலம்,
முல்லை என்னும் மலர்கள்.                                      83