3150. | சிற்றிடைச் சீதை என்னும் நாமமும் சிந்தைதானும் உற்று, இரண்டு ஒன்று ஆய் நின்றால், ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன மற்றொரு மனமும் உண்டோ? மறக்கல் ஆம் வழி மற்று யாதோ? கற்றவர் ஞானம் இன்றேல், காமத்தைக் கடத்தல் ஆமோ? |
சிற்றிடைச் சீதை என்னும் நாமமும் - மெல்லிய இடையை உடைய சீதை என்னும் பெயரும்; சிந்தை தானும் - இராவணன் மனமும்; உற்ற - நெருங்கி; இரண்டு ஒன்றாய் நின்றால் - இரண்டு என்ற நிலை கடந்து ஒன்றாகப் பொருந்திப் போய்விட்டால்; ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன - சீதை என்ற ஒன்றின் பெயரை நீக்கி மற்றொரு பொருளை எண்ணுதற்கு; மற்றொரு மனமும் உண்டோ - இன்னொரு மனமும் இருக்கின்றதோ? (இல்லை); (எனவே); மறக்கல் ஆம் வழி மற்று யாதோ - சீதையை மறப்பதற்குப் பொருந்திய வழி வேறு யாது உள்ளது? (எதுவும் இல்லை) ; கற்றவர் - கல்வி வல்லவராயினும்; ஞானம் - நன்மை தீமை பற்றிய உயரறிவு; இன்றேல் - இல்லையெனில்; காமத்தைக் கடத்தல் ஆமோ? - (பொருந்தாக்) காமத்தை வெல்லுதல் இயலுமோ? (இயலாது). 'சிற்றிடைச் சீதை' என்று முன்னர்ச் (3145) சூர்ப்பணகை அறிமுகம் செய்ததை இராவணன் மறந்திலன் என்பது தோன்றக் கூறுகின்றார். 84 |