3151. மயிலுடைச் சாயலாளை வஞ்சியா
     முன்னம், நீண்ட
எயிலுடை இலங்கை நாதன், இதயம்
     ஆம் சிறையில் வைத்தான்;
அயிலுடை அரக்கன் உள்ளம்,
     அவ் வழி, மெல்ல மெல்ல,
வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய்போல்,
     வெதும்பிற்று அன்றே.

    மயிலுடைச் சாயலாளை - மயிலின் (இயற்கையான) சாயல்
படைத்தவளை; வஞ்சியா முன்னம் - வஞ்சனையால் கவர்வதன் முன்னரே;
நீண்ட எயிலுடை இலங்கை நாதன் - உயர்ந்தோங்கிய கோட்டை
மதில்களை உடைய இலங்கையின் தலைவன்; இதயமாம் சிறையில்
வைத்தான் -
(தன்) மனமாகிய சிறைச்சாலையின் உள்ளே வைத்தான்;
(அதன் விளைவாக); அயிலுடை அரக்கன் உள்ளம் - வேற்படை
கொண்ட இராவணனாகிய இராக்கதன் மனம்; அவ்வழி - அவ்வகையில்;
வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய் போல் - வெயிற் பொழுதில்
வைக்கப்பட்ட வெண்ணெய் போன்று; மெல்ல மெல்ல வெதும்பிற்று -
சிறிது சிறிதாக வெப்பத்தால் உருகலாயிற்று. (அன்றே - ஈற்றசை).

     அசோக வனத்துச் சிறைக்கு முன்பே மனச்சிறையில் வைத்தான் என
நயம்பட உரைத்தார்.                                          85