3153.பொன் மயம் ஆன நங்கை மனம்
     புக, புன்மை பூண்ட
தன்மையோ-அரக்கன் தன்னை
     அயர்த்தது ஓர் தகைமையாலோ-
மன்மதன் வாளி தூவி நலிவது
     ஓர் வலத்தன் ஆனான்?
வன்மையை மாற்றும் ஆற்றல்
     காமத்தே வதிந்தது அன்றே?

    பொன்மயமான நங்கை - (அழகு மிகுதியினால்) பொன்னின் ஒளி
சூழும் எழிலுடைய சீதை; மனம் புக - மனத்தில் புகுந்துவிட்டதனால்;
புன்மை பூண்ட தன்மையோ - (இராவணன்) இழிவடைந்து விட்டானோ?
(அல்லது); அரக்கன் - அவ்விராவணன்; தன்னை அயர்த்ததோர்
தகைமையாலோ -
தனக்குத் தானே மறந்துவிட்டதாகிய தன்மையினாலோ;
மன்மதன் வாளி தூவி - மன்மதன் அம்புகள் ஏவி; நலிவது ஓர்
வலத்தன் ஆனான் -
(இராவணனுக்கு) வருத்தம் தரும்
வல்லமையுடையவன் ஆனான்; வன்மையை மாற்றும் ஆற்றல் -
ஒருவனுடைய வீரத்தை அழிக்கும் திறமை; காமத்தே வதிந்தது அன்றே -
காமத்தின் பால் பொருந்திற்று அன்றோ?

     வீராதி வீரனையும் வீழ்த்த எளிய மலரம்புகளே காரணமாயின என
உணர்த்தினார்.                                              87