3154. எழுந்தனன் இருக்கைநின்று; ஆண்டு,
     ஏழ் உலகத்துளோரும்
மொழிந்தனர் ஆசி; ஓசை முழங்கின,
     சங்கம் எங்கும்;
பொழிந்தன பூவின் மாரி;
     போயினர் புறத்தோர் எல்லாம்;
அழிந்து ஒழி சிந்தையோடும் ஆடகக்
     கோயில் புக்கான்.

    இருக்கை நின்று எழுந்தனன் - (இராவணன்) தான் வீற்றிருந்த
அரியாசனத்தினின்றும் எழுந்தான்; ஆண்டு - அப்பொழுது; ஏழ்
உலகத்துளோரும் -
ஏழு உலகங்களிலும் இருப்பவர்களும்; ஆசி
மொழிந்தனர் -
வாழ்த்துக்களைக் கூறினார்கள்; எங்கும் சங்கம் ஓசை
முழங்கின -
எவ்விடத்தும் சங்குகள் ஒலி முழக்கம் செய்தன; பூவின் மாரி
பொழிந்தன -
மலர் மழை பொழியலாயிற்று; புறத்தோர் எல்லாம்
போயினர் -
அருகிருந்த பிறர் எல்லாம் அகன்று சென்றனர்; அழிந்து ஒழி
சிந்தையோடும் -
(இராவணனும்) சிதைந்து குலைகிற மனத்தோடு; ஆடகக்
கோயில் புக்கான் -
பொன் மாளிகையான (தன்) அரண்மனைக்கு
சென்றான்.

     ஆடகம் - நால் வகைப் பொன்னில் ஒருவகை. சாதரூபம், கிளிச்
சிறை, சாம்புநதம் என்பன பிற.                                 88