இராவணன் காம நோய் மேலும் முதிர்தல்

3155. பூவினால் வேய்ந்து செய்த பொங்கு
     பேர் அமளிப் பாங்கர்,
தேவிமார் குழுவும் நீங்கச்
     சேர்ந்தனன்; சேர்தலோடும்,
நாவி நாறு ஓதி நவ்வி நயனமும்,
     குயமும், புக்குப்
பாவியா, கொடுத்த வெம்மை
     பயப்பயப் பரந்தது அன்றே.

     (அரண்மனையுட் புகுந்த இராவணன்); தேவிமார் குழுவும் நீங்க -
(தன்) மனைவியர் கூட்டத்திலிருந்து விலகியவனாய்; பூவினால் வேய்ந்து
செய்த -
மலர்கள் பரப்பி அமைக்கப்பட்ட; பொங்கு பேர் அமளிப்
பாங்கர் சேர்ந்தனன் -
உயர்ந்த பெரிய படுக்கையிடத்தில் சேர்ந்தான்;
சேர்தலோடும் - அவ்வாறு சேர்ந்த மாத்திரத்தில்; நாவி நாறு ஓதி நவ்வி
-
புனுகின் நறுமணம் வீசும் கூந்தலையுடைய மான் போன்ற சீதையினுடைய;
நயனமும் - கண்களும்; குயமும் - மார்பும்; புக்குப் பாவியா -
மனத்தினுள் பல்வகை நினைவுகளை ஊட்ட; கொடுத்த வெம்மை -
(அப்பாவனைகள்) தந்த உணர்ச்சி வெப்பம்; பயப்பயப் பரந்தது - சிறிது
சிறிதாக மிகுதிப்படலாயிற்று. (அன்றே - அசை).                   89